ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண் அறிவிப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகத்தின் சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகத்தின் சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் இஷிகாவா, நிகாடா,  டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து,  கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Image

இந்நிலையில், ஜப்பானில் இருக்கும் இந்தியர்களின் உதவிக்காக இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுரைகளை கண்காணித்து நடக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.