ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் டெல்லி NCR, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் கார்கில் பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தராவான் அருகே 71.01 டிகிரி கிழக்கு மற்றும் 36.52 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்திருந்தது. பஞ்சாபில் உள்ள நொய்டா, சண்டிகர், லூதியானா, ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், உதம்பூர் மற்றும் டேராடூன் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் பல இடங்களில் இருந்து நில அதிர்வு உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத், பஞ்சாபின் சில பகுதிகள், கைபர் பக்துன்க்வா, பெஷாவர் மற்றும் பிற பகுதிகள் உட்பட பாகிஸ்தான் முழுவதும் உள்ள பல நகரங்களில் நிலநடுக்க அதிர்வுகள் சிறிது நேரம் உணரப்பட்டன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காபூலில் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்ததாகவும், ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.







