முக்கியச் செய்திகள் இந்தியா

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தட்டுப்பாடு?

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல நாட்கள், பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழக்கம் போல் பொதுமக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் மின் தட்டுப்பாடு வரும் என ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில், நிலக்கரி இருப்புக் குறைவாக உள்ளது. அதனால் வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

சென்டர் பார் ரிசர்ச் ஆன் எனர்ஜி அன்ட் கிளீன் ஏர் என்ற அமைப்பின் அறிக்கையின் படி நாடு முழுவதும் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களிலும் 2 .7 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி உள்ளது. அனல் மின் நிலையங்களுடன் இணைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களின் கிடங்குகளில் 1.35 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரும் ஆகஸ்ட் மாதம் நாட்டின் ஒட்டு மொத்த மின்தேவையானது அதிகபட்சமாக (PEAK), 2 லட்சத்து, 14 ஆயிரம் வாட்டாக இருக்கும். ஏப்ரல் -மே மாதங்களில் இருந்த சராசரி மின் தேவையும் ஆகஸ்ட் மாதம் அதிகரித்து ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 426 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த மாதம் பருவமழை தொடங்கிய பின் நிலக்கரியை வெட்டி எடுத்து, மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளும் பாதிக்கப்படும். பருவ மழைக்கு முன்பே போதிய அளவில் நாம் நிலக்கரியை இருப்பு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், டிஜிட்டல் யுகத்திலும், எங்கும் நீக்கமற பரவலாக ,நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு பிரச்னையை சந்திக்கும் காலமாக ஜூலை -ஆகஸ்ட் மாதங்கள் இருக்கும் என மின் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


மேலும் மின் துறையில் நிலக்கரியின் தேவை அதிகரித்து வருவதற்கு ஏற்ப மின்னுற்பத்தி நிலையங்கள் போதிய அளவில் நிலக்கரியை இருப்பு வைத்துக் கொள்ளவில்லை. அதாவது, போதுமான அளவில் நிலக்கரி உற்பத்தி இருந்தும் உற்பத்தி நிலையங்கள் போதிய அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவில்லை. நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கு 150 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால், பாதியளவான 75 கோடி டன் அளவு மட்டுமே நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோக அமைப்பில் சரியாக திட்டமிடாததும், நிர்வாக திறமின்மையுமே முக்கிய காரணம் என்கின்றனர். மேலும் , 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா கால பொது முடக்கத்தால் மின் தேவை கணிசமாக குறைந்ததால், நிலக்கரி உற்பத்தியும் பெருமளவு குறைக்கப்பட்டது.நிலக்கரி சுரங்கங்களில் குறைவான ஊதியத்தில் பணியாற்றிய தற்காலிக தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றவர்களில், பாதி பேர் மீண்டும் சுரங்க பணிக்கு திரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளாக சுரங்கங்களில் பயன்படுத்தும் இயந்திரங்களும் சரி வர பழுது பார்த்து பராமரிக்கப்படவில்லை. நிலக்கரியை, அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு சென்ற ரயில்வே வேகன்களும், பிற பணிகளுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டது. இப்போது சில மாதங்களாக இயல்பு நிலைக்கு நாடு திரும்பியவுடன், அதிகரித்த மின் தேவைக்கு ஏற்ப நிலக்கரியை வழங்க இயலாத நிலையில் இந்திய நிலக்கரி துறை உள்ளது.


இனியும் தாமதிக்காமல், தென் மேற்கு பருவ மழைப்பொழிவு அதிகரிக்கும் முன்பாக, போர்க்கால அடைப்படையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள், நிலக்கரியை உற்பத்தியை விரைவுப்படுத்தி ,அனல் மின் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். மேலும் மாநில அரசின் மின் உற்பத்தி நிலையங்கள், மற்றும் தனியார் மின் நிலையங்கள் நடப்பாண்டில் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய விரைவாக அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அமுத பெருவிழா எனப்படும் , இந்திய நாட்டின் 75 வது விடுதலை திருநாள் விழா நடக்கும் ஆகஸ்ட் மாதத்தில், நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து , முக்கிய துறையான மின்சாரத்துறையில் தன்னிறைவு அடையாத நாடாகவே இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

– ரா.தங்கபாண்டியன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக ஆட்சியின் குளறுபடியால் வரி வருவாய் தடைபட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு

EZHILARASAN D

டெல்லி கடமை பாதையில் அணிவகுத்த 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்!!

Jayasheeba

சாலையின் நடுவே மின் கம்பங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்

EZHILARASAN D