3 வயது குழந்தைக்கு ‘சாதி, மதம் சாராதவர்’ சான்றிதழ் வாங்கிய பெற்றோர்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் கார்த்திக் என்பவர், தனது மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து வாங்கினார். நரேஷ் கார்த்திக் சிறிய வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.…

கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் கார்த்திக் என்பவர், தனது மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து வாங்கினார்.

நரேஷ் கார்த்திக் சிறிய வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு வில்மா என்ற மகள் உள்ளார். இவரை தனியாளர் பள்ளியில் சேர்ப்பதற்காக விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தார். ஆனால், அந்த விண்ணப்பத்தில் சாதி, மதம் கேட்கப்பட்டிருந்த இடத்தை பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டார். இதையடுத்து, அந்தச் சிறுமியின் விண்ணப்பத்தை அந்தப் பள்ளி நிர்வாகம் நிறுத்திவைத்தது.
இதுகுறித்து நரேஷ் கேட்டபோது, எந்தெந்த மதத்தையும், சாதியையும் சேர்ந்தவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்று விடுகிறார்கள் என்பதை அறிவதற்கான கணக்கெடுப்புக்காக மாணவ-மாணவிகளின் சாதி-மதம் குறித்த விவரத்தை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும், கடந்த 1973 மற்றும் 2000 ஆவது ஆண்டில் வெளியிட்ட அரசு உத்தரவில் சாதி மற்றும் மதத்தின் பெயரை விண்ணப்பத்தில் நிரப்பாமல் விட்டுவிடலாம் என்று அனுமதிக்கிறது என்று பள்ளி நிர்வாகத்திடம் நரேஷ் கார்த்திக் எடுத்துக் கூறியிருக்கிறார்.
எனினும், பள்ளி நிர்வாகம் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்தது. இதையடுத்து, 22 தனியார் பள்ளிகளில் மகளின் அட்மிஷனுக்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்திருக்கிறார். அனைத்து பள்ளிகளிலும் சாதி, மத பெயரை கேட்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் அலுவலகத்தில் தனது மகள் சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சாதி, மதம் சாராதவர் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிமையானது. இதுகுறித்து நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் வாங்கியிருப்பதன் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படும். சாதி, மதத்தின் பெயரில் இடஒதுக்கீடு கோரக் கூடாது என்ற ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும் தாசில்தார் ஒரு வாரத்தில் சாதி-மதம் சாராதவர் சான்றிதழை கொடுத்துவிடுவார்.
பின்னாட்களில் இதில் எந்தவொரு மாற்றமும் செய்ய முடியாது என்கிறார் நரேஷ் கார்த்திக்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.