புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்றுவந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகக்கூறி ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 8ஆம் தேதி தொடங்கி போராட்டம் நடைபெற்றது. தொடர் போராட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், மூன்று நாட்களாக நடைபெற்றுவந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். அடுத்த கட்டமாக, வருகிற 22ந்தேதி கையெழுத்து இயக்கமும், 29ந்தேதி தொகுதி தோறும் ஆர்ப்பாட்டமும், பிப்.5 ந்தேதி உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என முதலமைச்சர் நாராயண்சாமி தெரிவித்துள்ளார்.







