ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி ஆகியோர் கலந்து பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருந்த பொங்கல் விழா கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,
“11 மருத்துவக் கல்லூரி திறப்பு நிகழ்ச்சி நடத்துவது குறித்து தமிழக அரசுதான் சொல்ல வேண்டும்.” என்று கூறினார். மேலும், கொரானா கட்டுபாடுகளை திமுகவினர் பின்பற்றுவதில்லை என்றும், ஜல்லிகட்டு போட்டியை எந்த காரணத்திற்காகவும் நிறுத்த கூடாது, மாநில அரசு விதிமுறைகளை வகுத்து ஜல்லிகட்டை நடத்த வேண்டும். ஜல்லிகட்டை நடத்துவதற்கு பிரதமர் மிக முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி நாடகம் நடத்தியுள்ளது எனவும், பஞ்சாப் அரசை கண்டித்து தமிழகத்தில் ஒரு வாரம் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாவும், அரசியலை கடந்தது பிரதமர் மிக முக்கியமானவர் எனவும் அண்ணாமலை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி குறித்து தொடர்ந்து குற்றம் சாடிய அவர், எஸ்.பி.ஜி காவல்துறையின் 30 விதிமுறைகளை பஞ்சாப் அரசு மீறி உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி பங்குவம் இல்லாமல் பேசி வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் பஞ்சாப் அரசின் திட்டமிட்ட நிகழ்வு என குற்றம் சாட்டிய அண்ணாமலை, பஞ்சாப் அரசு மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
நீட் தேர்வு குறித்து பேசுகையில் “நீட் தேர்வு குறித்த வைத்தியலிங்கத்தின் கருத்து தனிப்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








