சீன எல்லையையொட்டிய அருணாச்சலப் பிரதேசத்தின் 40 கிராமங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும், அங்கிருந்து மக்கள் இடம்பெயர்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் பேசிய அமித் ஷா, எல்லையோர கிராமங்களில் உள்ள கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) நேரடியாகப் பொருட்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நேற்று இதுகுறித்து ஆய்வு செய்தேன். சீன எல்லையையொட்டிய 40 கிராமங்களுக்கும் மக்கள் திரும்பத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளது; இடம்பெயர்வும் நின்றுவிட்டது. மின்சாரம், வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளின் உச்சிப் பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தேஜ்பூர் அல்லது கவுகாத்தி போன்ற நகரங்களில் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்யக் கூடாது என்றும், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளிடமிருந்தே ராணுவமும் ஐடிபிபியும் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது” என்றார்.
மேலும், “அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பால் பொருட்கள், முட்டை, காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் மாவு உள்ளிட்டவற்றை விநியோகித்து வருகின்றனர். இதன் மூலம் கிராமப்புறக் குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பதுடன், உள்ளூர் வேளாண்மையும் மேம்படுகிறது. கிராம மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையிலான உறவும் வலுப்பெறுகிறது” எனத் தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை நான்கு முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு பெறுவதற்குக் கூட்டுறவு அமைப்புகளும் மகளிர் சுயஉதவிக் குழுக்களும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசம் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தன்னிறைவு பெறுவதற்கான சவாலை ஒவ்வொரு கூட்டுறவு அமைப்பும் மகளிர் சுயஉதவிக் குழுவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் செழிப்பு ஆகியவை மாநில வளர்ச்சியின் நான்கு முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்” என்றார்.
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு மற்றும் துணை முதலமைச்சரிடம் பேசிய அமித் ஷா, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் உறுதியளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நேற்று சுமார் மூன்றரை முதல் நான்கு மணி நேரம் வரை அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம். எதிர்காலத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் உதவி தேவைப்படும் அம்சங்கள் குறித்து கிரண் ரிஜிஜுவும் நானும் கவனத்தில் எடுத்துக்கொண்டோம். மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் மத்திய அரசு தாமதமின்றி ஏற்படுத்தித் தரும் என முதலமைச்சர் பெமா காண்டு மற்றும் துணை முதலமைச்சருக்கு உறுதியளிக்கிறேன்.
துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ், எல்லையோர 11 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவப் பிரிவுகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
எல்லையோர கிராமங்களை நாட்டின் கடைசிக் கிராமங்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக, நாட்டின் முதல் கிராமங்கள் என பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்ததை அமித் ஷா சுட்டிக்காட்டினார். எல்லையோர கிராமங்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வளர்ச்சிக்கான உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எல்லையோர மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்காக துடிப்பான கிராமங்கள் திட்டம் உருவாக்கப்பட்டது. முன்பு இவை நாட்டின் கடைசிக் கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கருத்தை மாற்றி, அவற்றை நாட்டின் முதல் கிராமங்கள் என்ற அடையாளத்தை வழங்கினார். நாட்டின் எல்லையோர கிராமங்களுக்கே வளர்ச்சிக்கான மிகப்பெரிய உரிமை உள்ளது” என்றார்.
தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசத்தின் 11 எல்லையோர மாவட்டங்களில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் ரூ.110.95 கோடி மதிப்பிலான 199 வளர்ச்சித் திட்டங்களை அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். மேலும், வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்கான வரைவு ஆவணமான ‘அருணாச்சலப் பிரதேச கூட்டுறவு தொலைநோக்குத் திட்டம் 2047’-ஐயும் வெளியிட்டார்.
இதற்கு முன்னதாக, சனிக்கிழமை இட்டாநகரில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அமித் ஷா, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்தார்.
சீனாவுடனான சுமார் 1,126 கி.மீ. நீள சர்வதேச எல்லையைக் கொண்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புப் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.




