ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் பொன்னியின் செல்வன்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பொன்னியின் செல்வன் படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

பொன்னியின் செல்வன் படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்டி வருகிறது. தமிழ் இலக்கியத்தின் முக்கிய நாவலாக கருதப்படும் பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று புனைவு கதையாகும். அரை நூற்றாண்டாக இதை படமாக்கும் முயற்சியில் தமிழ் சினிமா ஈடுபட்டிருந்தாலும் தற்போது தான் அதற்கான காலம் கை கூடியிருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இரண்டு பாகமாக பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்சன் திரைப்படம். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் களமிறங்கியிருக்கிறது.

கடந்த மாதம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கும் சூழலில் அடுத்தடுத்த ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி பாடல் பிரமாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார்.

5 மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், ஏஆர் ரஹ்மான் குரல் வரலாற்று ரீதியான கதைக்களத்திற்கு பொருந்தவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.