இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து விக்ரம் படத்தின் வசூலை முந்தியுள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சுவைமிக்க விருந்தாக அமைந்துள்ள பொன்னியின் செல்வன் வெளியான நாள் முதலே நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் வரலாற்றுப் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் 3 நாட்களுக்குள் ரூ.230 கோடி வசூல் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 2022ஆம் ஆண்டு வெளிவந்த பான் இந்தியா படங்களான கே.ஜி.எஃப் பாகம் 2 உலக அளவில் 1200 கோடியும், RRR உலக அளவில் 1150 கோடியும், விக்ரம் திரைப்படம் உலக அளவில் 430 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் 430 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்து விக்ரம் படத்தை முந்தியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடி வருவதால், கூடுதலாக வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







