பொன்னியின் செல்வன் படத்தில் இசை வெளியீட்டு விழா மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அது குறித்த முன்னோட்ட வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை லண்டனில் உள்ள ABBY ROAD ஸ்டுடியோவில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கான இசையமைப்பில் எடுபட்டுள்ள வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். ஒரு ஆல்பம், 7 பாடல்கள் என்ற காட்சிப் பதிவுடன் இந்த வீடியோ துவங்குகிறது. அக நக பாடலை பாடிய சக்தி ஸ்ரீகோபாலன், சின்மயி மற்றும் ஸ்வேதா மோகன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் , இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.








