சவுராஷ்ட்ரா – தமிழ் மக்களின் உறவுகள் மேம்பட வேண்டும்-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

சவுராஷ்ட்ரா – தமிழ் மக்களின் உறவுகள் மேம்பட வேண்டும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன்…

சவுராஷ்ட்ரா – தமிழ் மக்களின் உறவுகள் மேம்பட வேண்டும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மனதின் குரல் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 99-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும். இது இந்த ஆண்டில் இரண்டாவது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பெண் சக்திக்கு முதலில் தலைவணங்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில், அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்களும் முன்னேறி வருவதாக கூறினார்.

இதனையும் படியுங்கள்: நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்

சில மாதங்களுக்கு முன்னர் வாரணாசியில் நடைபெற்ற   காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு மற்றும் கலாச்சார உறவுகள் மீண்டும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. நாம் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளும் போது ஒற்றுமை உணர்வு மேலும் வலுவடைகிறது. இந்த ஒற்றுமை உணர்வுடன்தான் தற்போது சவுராஷ்டிரா-தமிழ் சங்கமமும்  அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் வரக்கூடிய ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதி வரை நடைபெறும்.

குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவுக்கும், தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு? என்று சிலர் ஆச்சரியப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிராவை சேர்ந்த பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்றும் சவுராஷ்டிரா தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து தமிழகத்தை சேர்ந்த பலர் எனக்கு பாராட்டு கடிதங்கள் எழுதியுள்ளனர். அதில்  மதுரையில் வசிக்கும் ஜெயச்சந்திரன் எனும் நபர்  எழுதிள்ள கடிதத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சவுராஷ்டிரா மற்றும் தமிழ் மக்களின்  உறவுகளை பற்றி முதன் முறையாக ஒருவர் சிந்தித்துள்ளார்.  சவுராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய மக்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இது ஒருவரின் வார்த்தைகள் அல்ல இவரது வார்த்தைகள்  ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர, சகோதரிகளின் வெளிப்பாடு” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.