நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 1,089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியானது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் : ”எங்கள் குடும்பத்தையே பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்” – பிரியங்கா காந்தி ஆவேசம்
இதற்கிடையே தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் காரைக்குடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருந்தது தெரியவந்தது. இது பிற தேர்வர்கள் இடையே சந்தேகத்தை எழுப்பியது. மேலும் அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ‘‘நில அளவர் தேர்வில், ஒரே பயிற்சி மையத்தில், அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்படும். அதில் தவறுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.







