தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாள் நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பிரதமர் மோடி தலைமையில் சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம், மேக்வால், பா.ஜ.க அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், கே.வி.விஸ்வநாதன், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். திரைத்துறையினரான ரவி மோகன், கெனிஷா, சரத்குமார், ஜி.வி.பிரகாஷ், குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடனும் பங்கேற்றார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி ”பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு பானையில் பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து சிறப்பு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது :- வணக்கம். அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள். உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கும் அந்த விவசாயிகளுக்கு உதவி செய்யும் சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் இந்த பொங்கல் விழா. உலகை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை நான் சம்பாதித்து இருக்கிறேன். அது எனது பாக்கியம். இது வெறும் பொங்கல் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது லோரி, மகா சங்கராந்தி என்ற பெயர்களில் அவை கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் கலாச்சாரத்தில் விவசாயம் என்பது உயிர் ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. அது பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இருந்து தான் விகாஷ் பாரதம் என்ற பெரிய லட்சியத்தை நாம் தற்பொழுது செயல்படுத்தி வருகிறோம்
இந்த மண்ணை பொன் போலவும் , தங்களது கண் போலவும் கருதுவர்கள் தமிழர்கள். சில மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் நடைபெற்ற இயற்கை விவசாய மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அப்போது நமது விவசாயிகள் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்புகளை மிக சாதாரணமாக செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து வியந்து போனேன். நமது வயிறு நிறைவதற்கும் நமது மனது நிறைவதற்கும் விவசாயம் தான் தேவை. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.







