முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: இரவு 12 மணி வரை மெட்ரோ சேவையை நீட்டித்த நிர்வாகம்

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வரும் 13, 14-ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும். இந்த நான்கு தினங்களுக்குமே தனி தனி சிறப்புகள் உண்டு. தமிழர்கள் எத்தனை விழாக்களை கொண்டாடினாலும், அதில் பொங்கல் பண்டிகைதான் முதன்மை பெற்றவையாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த பொங்கல் பண்டிகையை ஒவ்வொருவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டாடுவதற்காக, வேலை நிமித்தமாக அவரவர் வசிக்கும் இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்படி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஜன.16 -ஆம் தேதி முதல் 18 – ஆம் ம் தேதி வரை போக்குவரத்துத்துறை சார்பில் 15,619 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வரும் 13, 14-ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும்.

எனவே, 2023 ஜனவரி 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 13.01.2023 (வெள்ளிக்கிழமை), 14.01.2023 (சனிக்கிழமை) மற்றும் 18.01.2023 (புதன்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram