மாஞ்சோலை நினைவு தினம்: அரசியல் கட்சியினர் தாமிரபரணி நதியில் அஞ்சலி

மாஞ்சோலை நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தாமிரபரணி நதியில் அஞ்சலி செலுத்தினர். 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக் கோரி…

மாஞ்சோலை நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தாமிரபரணி நதியில் அஞ்சலி செலுத்தினர்.

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக் கோரி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது 100 மீட்டர் முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் காவல்துறையினருடன் ஏற்பட்ட சலசலப்பில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது காவல்துறை தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தாமிரபரணி ஆற்றில் பலர் குதித்ததில் இரண்டு பெண்கள், 2 வயது குழந்தை உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் நினைவு தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் தாமிரபரணி நதியில் காலை முதல் பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் மலர் வளையம் வைத்தும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செல்வப் பெருந்தகை MLA பேட்டி

அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாமிரபரணி நதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி முழக்கங்களை எழுப்பினர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் தாமிரபரணி நதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகியோர் தாமிரபரணி நதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக அஞ்சலி செலுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவாக தாமிரபரணி நதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அரசு அதற்கு தயாராக இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாமிரபரணி நதியில் நினைவு தூண் அமைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.