ரூ.16.5 கோடி வசூலித்தும் உயிரிழந்தது குழந்தை… உயர் நீதிமன்றம் கேள்வி

முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக வசூலிக்கப்பட்ட ரூ.16.5 கோடி குறித்து கேரள நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநிலம், வளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரமீசா தஸ்னி.…

முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக வசூலிக்கப்பட்ட ரூ.16.5 கோடி குறித்து கேரள நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநிலம், வளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரமீசா தஸ்னி. இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. முகமது இம்ரான் என்ற இந்த குழந்தை பிறந்த 17 நாட்களில் முதுகெலும்பு தசைநார் சிதைவு என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ரூ. 18 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி தேவைப்பட்டது.  அதற்காக நிதி திரட்ட பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

உலகெங்கிலும் இருந்த மக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது. குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக பலர் அவர்கள் வெளியிட்டிருந்த வங்கி கணக்கில் நிதி செலுத்தினர். ரூ.16.5 கோடி வசூலான நிலையில் குழந்தை இர்பான் கடந்த செவ்வாய்க் கிழமை பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அந்தப் பணத்தை யார் யார் அனுப்பினார்களோ, அவர்களுக்கு திருப்பிச் செலுத்த குழந்தையின் தந்தை ஆரிப் முடிவு செய்தார்.

இந்நிலையில் இதே போன்ற நோயால் கேரளாவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தை கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு மாநில அரசே அவ்வளவு செலவில் ஊசி மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இர்பானுக்காக வசூலிக்கப்பட்டத் தொகையை என்ன செய்தார்கள் என்றும் அந்தப் பணத்தை, தசை நார் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியது. பின்னர் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அரசு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம் இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரிக்க இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.