மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். ஆளுநர் வருகையையொட்டி மெரினா கடற்கரை சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றி விடப்பட்டு உள்ளது. நேப்பியர் பாலம், சேப்பாக்கம் இருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
டெல்லியில், ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு உரிய கொரோனா கட்டுப்பாட்டுகளை பின்பற்றி நடந்தது. மேலும், மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.








