சிறுமியை கடத்திய சாராய வியாபாரிக்கு போலீஸார் ஆதரவாகச் செயல்படுவதாக 10 நாள்கள் கடந்தும் சிறுமி மீட்கப்படாததால் தாயார் கண்ணீர் மல்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வேலங்குடியைச் சேர்ந்த வசந்தி மகள்
கார்த்திகா(15). இவர் கொல்லுமாங்குடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில்
செவிலியர் டிப்ளமா படிப்பு படித்து வருகிறார்.
மாணவி கார்த்திகா அவர் வசிக்கும் பகுதியில் சாராயம் விற்பனை செய்யும் நிவாஸ்
என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு
கார்த்திகா நிவாசுடன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவரது தாய் வசந்தி பேரளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து
தனது மகளை மீட்டுத் தருமாறு கூறியுள்ளார். மேலும் கார்த்திகா நாள்தோறும் காலையில் தன்னை தொடர்பு கொண்டு இன்று வீட்டுக்கு வந்துவிடுவதாக கூறி வருவதாகவும் தாயார் வசந்தி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இத்தனை புகார்களுக்கு பிறகும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து வசந்தி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று
சாராய வியாபாரிடம் சிக்கியுள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு மாவட்ட வருவாய்
அலுவலர் சிதம்பரத்திடம் புகார் அளித்தார். அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்தார்.
சிறுமி ஒருவரை சாராய வியாபாரி கடத்தி சென்றதாகக் கூறப்படும் சம்பவமும், இது
தொடர்பாக பேரளம் போலீசார் 10 தினங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காமல்
மதுத்து வருவதாகக் கூறப்படுவது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.








