காங். போராட்டம்: பிரபல நடிகர் காரை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ’ஜோசப்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்ட இவர்,…

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ’ஜோசப்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்ட இவர், தமிழில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நேற்று போராட்டம் நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. சாலையில் காத்திருந்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சாலையை ஏன் மறிக்கிறீர்கள்? என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

ஜோஜு ஜார்ஜ், குடிபோதையில் இருந்ததாகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிலர் அவரை தாக்க முற்பட்டனர். அப்போது போலீசார், ஜார்ஜை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், அவர்களின் போராட்ட முறைக்குத்தான் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். என் பக்கத்து காரில், நோயாளி இருந்தார். ஏராளமானோர் தங்கள் கார்களுக்குள் அமர்ந்து கொண்டு சிரமப்பட்டனர். நான் அவர்களிடம் சென்று சாலை மறியலை கைவிடும்படி அமைதியாகத்தான் சொன்னேன். அதற்கு என் காரை உடைத்துவிட்டனர் என்றார். பின்னர் மராடு போலீசில் காரை சேதப்படுத்தியது தொடர்பாக அவர் புகார் செய்தார்.

இதையடுத்து கொச்சியின் முன்னாள் மேயரும் மூத்த காங்கிரஸ் கட்சி தலைவருமான டோனி சாமினி உட்பட காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.