சவுக்கு சங்கர் பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசியதாக கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.







