கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண அதிக சுற்றுலா பயணிகள் வருகையை ஒட்டி மலைப்பாதையில் பழுதாகும் வாகனங்களை சரி செய்ய மொபைல் ஒர்க் ஷாப் அமைத்து காவல்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
கொடைக்கானலில் வரும் மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் கோடை விழா மற்றும் மலர்
கண்காட்சி நடைபெற உள்ளது. இதை காண அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். எனவே மலைச் சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவை, கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இதில் மலைச்சாலையில் போக்குவரத்தை கண்காணிக்க பைக் பேட்ரோல், மலைச்சாலையில் பழுதாகும் வாகனங்களை உடனடியாக சீர் செய்ய மொபைல் ஒர்க் ஷாப், நகர் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள் குழு ஆகியவற்றை அமைத்தது.
இவை அனைத்தும் இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் ஆகியோர் தெரிவித்தனர்.
—–ம.ஶ்ரீ.மரகதம்







