சிவகங்கையில் 1 டன் அளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 300 கிலோ அளவு கெட்டுப் போன இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலைய பகுதிகளிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதாகவும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர் புகார் வந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து அப்பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல உணவு கடைகளிலும் கெட்டுப்போன இறைச்சி மற்றம் கலர் ரசாயன பொடிகள் பயன்படுத்திய உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த கண்டுபிடித்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரண்மனைவாசல் பகுதியில் மளிகை கடைக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்ததில் 1 டன் அளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் வாரச்சந்தையிலும் சோதனை செய்தார்கள், இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ அழுகிய மீனகள் மற்றும் 50 கிலோ இறைச்சியும் கைப்பற்றி அவற்றை அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கெட்டுபோன இறைச்சிகளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
—–அனகா காளமேகன்






