அதிமுக தேர்தல் அறிக்கை அமுத சுரபி என பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் அன்பழகனை ஆதரித்து ராமதாஸ் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பாலக்கோடு அதிமுக மற்றும் அன்பழகனின் கோட்டை என்றும், அதில் சிறிய ஓட்டைக்கூட போட முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உயர்கல்வி மேம்பட உழைத்த அமைச்சர் அன்பழகனின் வெற்றி உறுதி என்று கூறிய ராமதாஸ், அதிமுக, பாமக தேர்தல் அறிக்கையை பார்த்து திமுக காப்பியடித்துள்ளதாக விமர்சித்தார். மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி என்றும், பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.







