2011ம் ஆண்டு இதே நாளில் இந்திய அணி உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
கடந்த 2011ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதற்கான அரையிறுதிப் போட்டியில் 10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் அணியுடன் பலப்பரிட்சையில் ஈடுபட்டது இந்தியா. இறுதிப் போட்டியை விட இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டிதான் இரு நாட்டு ரசிகர்களாலும் அதிகம் உற்றுநோக்கப்பட்டது.
பஞ்சாப் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 48 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் உமர் குல் வீசிய 3வது ஓவரை எதிர்கொண்ட ஷேவாக், 21 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
37வது ஓவர் வரை களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர் 85 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விளையாடிய இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 260 ரன்களை குவித்தது.
261 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து களமிறங்கியது பாகிஸ்தான். எனினும், 49.5 ஓவர்களில் 231 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றதோடு, இலங்கை அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை தன்வசமாக்கியது. இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கு நங்கூரமிட்ட இன்றைய தினம் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நாளாக பார்க்கபடுகிறது.







