RRR படத்தின் உண்மை நாயகனுக்கு சிலை – பிரதமர் மோடி திறந்து வைப்பு!

RRR படத்தின் உண்மை நாயகனான அல்லுரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம், பீமாவரத்தில் அல்லுரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவை தொடங்கிவைத்து, அவரது…

RRR படத்தின் உண்மை நாயகனான அல்லுரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலம், பீமாவரத்தில் அல்லுரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவை தொடங்கிவைத்து, அவரது சிலையையும் மோடி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், அல்லுரி சீதாராம ராஜுவின் அடையாளமான வில் அம்பு மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது.

ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய புரட்சி வீரர் இந்த அல்லுரி சீதாராம ராஜு. இவரது வாழ்வை மையமாக வைத்து படங்கள் வெளிவந்துள்ளன.1974ம் ஆண்டு இவரது வாழ்வை மையமாக வைத்து அல்லுரி சீதாராம ராஜு என்ற பெயரிலேயே திரைப்படம் வந்திருந்தது. இதன் பிறகு தற்போது ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படமும் இவரது வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டு பெரிய பாராட்டைப் பெற்றது. இதில், தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண், அல்லுரி சீதாராம ராஜு அவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

ஆந்திர மாநிலம், பண்டுரங்க கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்லுரி சீதாராம ராஜு. கல்லூரி படிக்கும் காலத்திலேயே பழங்குடி மக்களுடன் பழகி அவர்கள் வாழ்க்கை குறித்து அறிந்துகொண்டார். ஆங்கிலேய அரசால் பழங்குடியின மக்கள் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்படுவதையும் அறிந்த அல்லுரி சீதாராம ராஜு ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராடினார். ஆங்கிலேயர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களையே தாக்குவது, கெரில்லா முறையில் போர் புரிவது போன்ற முறைகளைக் கையாண்டவர். இதையே ஆர்.ஆர்.ஆர். படத்தின் முக்கிய கருவாக எடுத்து படமாகியிருந்தனர்.

ஆந்திர மக்களால் மலைவீரர் என்று போற்றப்படும் இவருக்கு பல இடங்களில் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவரது சிறப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இவரின் 125வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 30 அடி வெண்கல சிலை மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.