பிரபல யூடியூபரை காணத் திரண்ட 2கே கிட்ஸ் கூட்டம்… தனிமனித கொண்டாட்டத்தை நோக்கி நகர்வதன் மூலம் ஆக்கப்பூர்வமான தளத்திலிருந்து விலகுகிறதா இளம் தலைமுறை. சமூக ஊடகங்களில் மூழ்கும் உளவியல் சிக்கல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
டிடிஎஃப் வாசன், தனது பிறந்தநாள் அன்று, யூடியூப் சேனலை பின்தொடர்கின்றவர்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும், அவர்களோடு பிறந்தநாளைக் கொண்டாட இருப்பதாகவும், அதன் படி ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து மீட்டப் ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்வு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. கோவையைச் சேர்ந்த வாசன், கடந்த 2020-ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கியது முதல் லட்சக்கணக்கான இளைஞர்கள் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் 2கே கிட்ஸ் என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர்கள், டிடிஎஃப் வாசனை பின்தொடர்கின்றனர். யூடியூபில் வருமானத்தை ஈட்டுவதோடு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே வாசனுக்கு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.
நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில், விஸ்வரூபம் எடுத்திருக்கும் யூடியூபில், தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி, பலரும் பாப்புலர் ஆகி வருகின்றனர். இந்த பாபுலர் கலாச்சாரம்தான் தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான ஃபாலோவர்களை யூடியூர்கள் வழிநடத்தும் விதம் ஆபத்தானதாக இருக்கிறது என்கின்றனர் சிலர். அதற்கு உதாரணம் பப்ஜி மதன். வளரும் தலைமுறைகள் ஆக்கப்பூர்வமான தளத்தை நோக்கி நகர்வதிலிருந்து விலக, யூடியூப் சேனல்கள் வழிவகுப்பதாக கூறப்படுகிற்கின்றனவா? யூடியூபில் மூழ்கும் இளம் தலைமுறைகளின் உளவியல் என்ன? சமூகப் பொறுப்போடு அதை எப்படிக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா.
அண்மைச் செய்தி: ‘விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்திகள்-தேமுதிக கண்டனம்’
இந்த நிகழ்வு குறித்து அவர் தெரிவிக்கையில், வளரும் தலைமுறைகளிடம் சமூக கூடகங்களில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்துப் பெற்றோர்கள் உரையாடுவதன் மூலம் பாப்புலர் கலாச்சாரத்தில் மூழ்கும் மனநிலையிலிருந்து மீட்க முடியும். வளரும் இளம் தலைமுறைகளை சமூக ஊடகங்களில் உள்ள ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பது அனைவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பு என்பதை உணர்த்துகின்றன இப்படியான நிகழ்வுகள் என அவர் கூறுகிறார்.
– சதீஷ், நியூஸ் 7 தமிழ்








