”புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருக்க சொன்னார்”- முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி என்னை அமைதியாக இருக்க சொன்னார் என முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்…

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி என்னை அமைதியாக இருக்க சொன்னார் என முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியா முழுக்க பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் நடைபெற்ற போது அப்போதைய ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக்.

சத்யபால் மாலிக் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்தார் அந்த பேட்டியில் அவர் புல்வாமா தாக்குதலில் பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்கச் சொன்னார் என தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது இந்தியா முழுவது பேசு பொருளாக மாறியுள்ளது.

அந்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது..

“ இராணுவத்தினரின் பெரிய கான்வாய்கள் சாதரன சாலையில் பயணிப்பதில்லை. அதனால்தான்  இராணுவ அதிகாரிகள் தங்களது வீரர்களை அழைத்துச் செல்ல விமானம் கேட்டார்கள். ஆனால்  அவர்களுக்கு ஐந்து விமானங்கள் தேவைப்பட்டது. மத்திய அரசின்  உள்துறை அமைச்சகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இராணுவ வீரர்களுக்கு விமானங்களை வழங்கியிருந்தால், இது நடந்திருக்காது.  நம்முடைய தவறு காரணமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது.  இது குறித்து அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறினேன். பிரதமர் மோடி,  இந்த விவகாரம்   பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

புல்வாமா தாக்குதல் என்பது  100 சதவீதம் உளவுத்துறையின் தோல்விதான்.  300 கிலோ வெடிமருந்துகளை ஏற்றிய கார் இராணுவத்தின் கான்வாய் மீது மோதியுள்ளது. ஆனால் இந்த கார்  குண்டுவெடிப்புக்கு 10-12 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சுற்றி வந்துள்ளது. இதைக்கூட  உளவுத் துறையால் கண்டறியப்படவில்லை.

இந்த அளவுக்கு  பெரிய அளவிலான வெடிபொருட்கள் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வந்திருக்க முடியும். ஆனாலும் கூட பாதுகாப்பு குறைபாடுகளே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம். அதேபோல காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் பாஜக  அரசின் திட்டம் குறித்து எனக்கு  முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை” என சத்யபால்  மாலிக் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.