#QUAD மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்!

‘குவாட்’ அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம் செய்யவுள்ளார். பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து…

PM Modi to visit USA tomorrow to participate in #QUAD conference!

‘குவாட்’ அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம் செய்யவுள்ளார். பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை (செப். 21) நடைபெறுகிறது. இதில், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை அமெரிக்கா செல்கிறார். ’குவாட்’ உச்சி மாநாட்டில் ரஷ்யா–உக்ரைன் மோதல், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் இந்தோ- பசிபிக் பிராந்திய நிலவரம் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர். தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களுடனும் பிரதமர் மோடி தனித்தனி சந்திப்புகளை நடத்த உள்ளார். குவாட் மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெறும் எதிர்காலத்துக்கான உச்சி மாநாட்டில் செப். 23-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் செப். 22-ம் தேதி அவர் சிறப்புரை நிகழ்த்துகிறார். இவற்றை தவிர அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பை சந்திப்பார் என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று முன்தினம் (செப். 18) டிரம்ப் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.