பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில் சென்னை மாநகரம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
புதிய விமான நிலைய முனையம் திறப்பு, சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை
தொடக்க நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர்
மோடி இன்று சென்னை வர உள்ளார். இதனையொட்டி, சென்னை மாநகரம் முழுவதும்
5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை – வந்தே பாரத் ரயில்சேவை திட்டத்தை பிரதமர் தொடங்கி
வைக்க உள்ள சென்னை, செண்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில்
ஈடுபட்டனர். குறிப்பாக, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்த பின்னர் அவர்களை உள்ளே அனுமதித்த போலீசார், ரயில்
நிலையத்திற்குள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளின் உடைமைகள், அவர்களின் பயண
டிக்கெட், அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் பரிசோதனை செய்தனர்.
மேலும், ரயில் நிலையம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்ட போலீசார்
அடையாள அட்டையின்றி ரயில்வே ஊழியர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதன் தொடர்ச்சியாக, விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா
மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளதால் அப்பகுதி
முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்ட நிலையில் மெரினா கடற்கரைகளில் கடலோர காவற்படை போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.







