வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி அச்சுறுத்தி வருவதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு பள்ளியில் தமிழ்நாடு தின நினைவு பேரணி
நடைபெற்றது.இதில் தமிழக அமைச்சர் முத்துசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற
உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:
“அரசியல் எதிரிகள் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கதுறையை ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கின்ற பணியை மட்டுமே பிரதமர் மோடி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இது பாஜகவின் பழிவாங்கும் செயல். அச்சுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என்றும் தோற்கடித்து விடலாம் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி.
அவர் எண்ணம் தவறு. இது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரியும். பாஜகவினர் தேர்தலில் தோல்வி அடைவார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அவர்கள் சிறை செல்வது உறுதி.
இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.







