முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! – சீமான் அறிக்கை

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“நடப்பாண்டு செப்டம்பர் மாதம் முதல் 2000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய அரசின் அறிவிப்பு நாட்டு மக்களை முட்டாளாக்கும் செயலாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.

கறுப்புப் பணத்தை முழுவதுமாக ஒழிக்கப்போகிறேன் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளன்று இரவோடு இரவாக, ஐந்நூறு ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள கறுப்புப் பணம், இலஞ்சம், தீவிரவாதச் செயல்கள் என அனைத்தும் ஒழிந்து 50 நாட்களுக்குள் நாடே சொர்க்கமாகிவிடும் என்று கூறினார். ஆனால் அதனால் ஒரு நன்மையும் ஏற்படாததுடன் கடும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் அடிப்படை இலக்காக இருந்த கறுப்பு பண ஒழிப்பு என்பது இன்றுவரை இந்தியாவில் சாத்தியப்படவில்லை. மாறாக மோடி அரசு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வாயிலாக கறுப்பு பணப்புழக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

முன்னேற்பாடுகள் எதுவுமின்றி ஒரே இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களிடையே ஏற்பட்ட பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டும், வங்கி வாசல்களில் காத்திருந்தும் பலியான பல்லாயிரக்கணக்கான குடிமக்களுக்கு பாஜக அரசு என்ன நீதி வழங்கப்போகிறது? தவறான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்கள் தொழிலைத் தொலைத்த பல லட்சக்கணக்கான மக்களுக்கும், வேலை இழந்த கோடிக்கணக்கான மக்களுக்கும் மோடி அரசு கூறப்போகும் பதில் என்ன? தற்போதைய பொருளாதார பின்னடைவுக்கு பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரி விதிப்பும்தான் காரணம் என்ற உலக வங்கியின் குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி என்ன பதில் கூறப்போகிறார்?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தவுடன் அதனை வரவேற்று, புதிய இந்தியா பிறந்து விட்டதாக மோடியைப் புகழ்ந்து பேசிய அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள் இப்போது வாய்திறந்து பேசுவார்களா? 2000 ரூபாய் தாள்களால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை எனில் ஏன் அதனை வெளியிட வேண்டும்? இப்போது ஏன் அதனைத் திரும்பப்பெற வேண்டும்? அதனை அச்சடிப்பதற்காகச் செலவிடப்பட்ட தொகையை யார் கொடுப்பது? தற்போது மீண்டும் 2000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளை நோக்கி மக்கள் அலையவிட்டு அவர்களின் உழைப்பு மற்றும் நேரத்தினை வீணடிப்பதால் ஏற்படும் நட்டத்தை யார் ஈடுகட்டுவது? என்ற கேள்விகளுக்கு இந்தியாவை ஆளும் பாஜக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

ஆகவே, பண மதிப்பிழப்பு என்ற தவறான பொருளாதார நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குள் தள்ளி, ஏழை மக்கள் தலையில் தாங்க முடியாத சுமையை ஏற்றியுள்ளதுடன், தற்போது மீண்டும் 2000 ரூபாய் தாள்களை செல்லாது என்று அறிவித்துள்ள பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நாம் தமிழர் சார்பாக வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்

ஆபாச மெசேஜ்: நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார்

Gayathri Venkatesan

‘ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாகப் பேசுவார்’ – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு

Arivazhagan Chinnasamy