‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19,500 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2019ம் ஆண்டில், ‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 8 தவணைகளில், 1.38 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 9வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இதன் மூலம், 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய், அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட உள்ளது.
நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, ‘வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை எப்படி பார்க்க விரும்புகிறோம் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றார். உலகின் மாறிவரும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்திய விவசாயிகள் முன் வர வேண்டும் என்ற பிரதமர் மோடி, இந்தியாவில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறிய விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் கூறினார். விவசாயிகளின் சிரமத்தை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்ட்டார்.







