“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும்” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி!

தவெக வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழக வெற்றி கழகம் சார்பில் வெற்றி பெற்ற ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். மதுரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள், சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகள், டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து ரெய்டு நடத்தி சீல் வைத்து வருகிறார்கள்.

இது பழைய மாதிரியான ஆட்சி கிடையாது. இது தளபதி அண்ணன் முதல்வர் விஜயின் ஆட்சி. முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் எதை நினைத்து செயல்படுகிறாரோ, அதை நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும். மக்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். இன்னும் 2, 3 மாதத்தில் எல்லாம் சீராகி நல்ல முறையில் செல்லும். சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையையும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முதல்வர் யாருக்கு எந்த துறை ஒதுக்கலாம் என தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறார். 40, 50 வருடமாக நிர்வாகத்தையே வேறு மாதிரியாக மாற்றி வைத்துள்ளார்கள். அதை ஒரே நாளில் சரி செய்ய முடியாது, அதற்கு முழு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய பணி, எல்லா துறையும் கடுமையான நெகடிவ் – ல் உள்ளது. அதன் நிலைமை குறித்து ஆய்வு செய்தால் தான் தெரியும், அதைதான் முதல்வர் முதல் நாளில் இருந்து செய்து வருகிறார்.

மகளிர் உரிமைத்தொகை எப்போது 2500 ரூபாய் வழங்குவீர்கள்? என்ற கேள்விக்கு,

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் செய்ய முடியும், அதற்குள் முதல்வர் நிதி ஆதாரங்களை சரி செய்து, இதெல்லாம் ஒரு நாளில் மட்டும் சரி செய்ய முடியாது.

முதல்வர் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேள்விக்கு,

முதல்வர் விஜய் தேவையான நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார். செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. பெஞ்ச் மார்க்கும் கிடையாது.

தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிகளின் நீட்சியா? என்ற கேள்விக்கு,

மக்களுக்கு தேவையான அனைத்தும் வெளிப்படையாக நடந்து வருகிறது. ஒரு சட்டமன்றத்தில் எவ்வளவு இளைஞர்கள், பெண்கள், அமர்ந்துள்ளனர் என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நினைத்ததை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். இது எந்த வெர்ஷனும் கிடையாது. இது புது வெர்சன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.