தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அச்சகர்களாவதற்கு, அதற்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு மனுவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆகம விதிகளைப் பின்பற்றிதான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக, அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளதாகவும், ஆகமவிதிகளின்படி, முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு, ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலையதுறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.







