மகான்களின் பூமி இந்தியா என்று பிரமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, புனே அருகே உள்ள தேகு என்ற இடத்தில் மகான் துகாராமின் கற்கோவிலை திறந்து வைத்தார். 17ம் நூற்றாண்டில் மகராஷ்ட்ராவில் வாழ்ந்த மகான் துகாராமுக்கு தேகு-வில் பக்தர்கள் சார்பில் கோயில் கட்டப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்தது. எளிய முறையில் இருந்த அந்த கோயில் தற்போது கற்கோவிலாக கட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
உலகின் மிகப் பழமையான அதேநேரத்தில் வாழும் நாகரீகங்களில் ஒன்றாக இந்திய நாகரீகம் உள்ளது என கூறிய அவர், இதற்கான பெருமை அனைத்தும் நமது மகான்களையே சாரும் என்றார். இந்தியா மகான்களின் பூமி என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் காரணமாகவே, இந்தியா எப்போதும் நிலைத்து நிற்கும் என கூறப்படுகிறது என்றார்.
மகான் துகாராம் பக்தியை மட்டும் பரப்பவில்லை என்றும் தேசபக்தி, சமூக நலம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். சாதிப் பாகுபாடு காட்டுவது மிகப் பெரிய பாவம் என மகான் துகாராம் தெரிவித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.









