குவைத் மீது ஈரான் தாக்குதல் : இந்தியர் பலிக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்…!

குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை. இந்த சூழலில் ஈரான் மீது கடந்த 26-ம் தேதி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே நேற்று குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இன்று அதிகாலை குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் எதிரொலியால் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டடுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததோடு, நமது நாட்டவர் பலரும் காயமடைந்துள்ளனர். மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கியதிலிருந்து, பொதுமக்களையும், பொது உள்கட்டமைப்புகளையும் குறிவைக்கக் கூடாது என்று நாங்கள் வன்மையாக வலியுறுத்தி வருகிறோம். இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

உயிரிழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்களுக்கு எங்களது தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்திய நாட்டினரின் நலனுக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்.

இப்பகுதி முழுவதும் உள்ள இந்தியத் தூதரகங்களும் அலுவலகங்களும் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, நமது சமூகத்திற்குத் தொடர்ந்து முனைப்புடன் ஆதரவளித்து வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.