பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.
வாரணாசியில், ருத்ராக்ஷ் என்ற பெயரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு அரங்கம் ஜப்பான் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அரங்கை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சார்பில் நூறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனை நவீன முறையில் மாற்றப்பட்டுள்ளது. அதையும் பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
ரூ.744 கோடி செலவில் உருவாக இருக்கும் திட்டங்களான சாலை பணிகள், பல்லடுக்கு வாகன நிறுத்தம், சுற்றுலா திட்டங்கள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கங்கை நதியில் நவீன படகு மூலம் சுற்றிப்பார்க்கும் திட்டம், வாரணாசி – காசிபூர் சாலையில் மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
கிராமப்புற குடிநீர் திட்டங்கள், வீட்டுத்தோட்ட வளர்ப்பு திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்த பிரதமர், தொகுதியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.







