பிளஸ் டூ மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அந்த மாணவிக்கு பரிசோதனை செய்துள்ளனர். அதில், மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி பெற்றோருக்கு மருத்துவர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். அவர்கள் கூறியதுபோல் அடுத்த சில மணி நேரங்களிலேயே மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் போதிய வளர்ச்சி இன்றி பிறந்ததால் அந்த குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, தன்னுடன் டியூசனில் படிக்கும் மாணவனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், அதன்பின் அந்த மாணவன் கட்டாயப்படுத்தி தன்னுடன் தனிமையில் இருந்ததாகவும் கூறினார். மேலும், தனது கர்ப்பத்திற்கு காரணம் அந்த மாணவந்தான் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







