கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் ; காவல்துறை வழக்கு பதிவு…!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் இனாம்கிளியூர் பகுதியை சேர்ந்த ஞானசேகர் – ராஜ லெட்சுமி தம்பதியின் மகன் கவியரசன் (17). இவர் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம்  இவருக்கும் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் 11 ஆம் வகுப்பு மாணவனின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாணவனின் பெற்றோர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  காவல்துறையினர் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி இரு மாணவர்களின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மீண்டும் 12 ஆம் வகுப்பு மாணவா் கவியரசனுக்கும், 11 ஆம் வகுப்பு மாணவர் தரப்பினருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கவியரசனை 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர்  தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர் கவியரசன் நேற்று உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 15 மாணவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.