ஆளுநர் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சரின் கடித்திற்கு ஆதரவு தெரிவித்து கேரள முதலமைச்சர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து தீபரவட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் இதற்கு முன்பே தமிழக அரசிற்கும் ஆளுநருக்கு இடையே பல்வேறு முரண்கள் ஏற்பட்டு பரபரப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலநிர்ணயம் வேண்டும் என ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
https://twitter.com/mkstalin/status/1648277762120253440?s=46
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநருக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு பாராட்டுதலை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல்பாட்டுக்கு கூட்டு நடவடிக்கை அவசியம் என்றும் அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு ஆளுநர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரீசலிப்போம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், ஆளுநர் விவகாரம் குறித்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி. மாநில சுயாட்சியை பறிக்கும் செயலுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடும், கேரளாவும் அரணாக இருந்துள்ளன. ஆளுநரின் வரம்புமீறலுக்கு எதிரான போரிலும் நாம் வெல்வோம். தீபரவட்டும் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எழுதி இருந்த கடிதத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்து கடிதம் அனுப்பி இருந்தார். அதில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி இருந்த தீர்மானத்திற்கு பாராட்டுதலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







