டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன். மத்திய அரசு நடத்திய 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நவம்பர் 26-ந்தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 8ம் கட்ட பேச்சுவார்த்தை, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.
“வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகள் பங்கேற்றதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், எந்தவித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும், திட்டமிட்டப்படி குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு நடைபெறும் எனவும் அறிவித்தனர்.







