காணாமல் போன சாலையை மீட்டு தர வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் மவுத்தன்பட்டி ஜெகநாதபுரம் இணைப்பு சாலையாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் அகல ரயில் பாதை விரிவாக்க பணிக்காக நகர் பகுதிக்கு செல்லும் சாலையை துண்டித்து இந்த இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இச்சாலை, தற்போது வரை எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் முற்றிலும் சிதலமடைந்து, மேடும் பள்ளமுமாக, வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. 15 கிராம மக்கள் நகர் பகுதிக்குச் செல்ல பயன்படுத்தக்கூடிய இந்த சாலையில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையக் கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளி சங்கத்தின் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இரண்டு முறை போராட்டம் அறிவித்தும், வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் சாலை அமைப்பதாக உறுதி அளித்தனர்.
ஆனால் சாலை அமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் சாலையைக் காணவில்லை என்கிற அடிப்படையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.
மேலும், உடனடியாக இந்த சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், இல்லையென்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் மாவட்ட அளவில் நடத்தப்படும் என்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
—-சௌம்யா.மோ






