ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோலிய விலையை, எரிப்பொருள் நிறுவனங்களே தினசரி நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் சென்றதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இந்த விலை குறைப்பு ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சலுகையில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, பெட்ரோல் போடும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழக்கான பெட்ரோலுக்கான தொகையை கொடுத்து விட வேண்டும். இந்த 25ரூ. சலுகை, வங்கிக் கணக்கில் தான் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் வரை இந்த சலுகை கிடைக்கும் என அவர் அறிவித்துள்ளார். பெட்ரோல் உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் எனவும், பெட்ரோல் விலையால் வாகனங்களை எடுக்க பயந்து தொழில் செய்ய சந்தைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்தார். தொடர்ந்து விண்ணைத் தொட்ட பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் அன்மையில் கொடுத்த இந்த அறிவிப்பு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.






