இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு திருக்கோயில்களின் வருவாயை அதிகரிக்க வட்டாட்சியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோயில் வசம் கொண்டு வந்து திருக்கோயில் வருவாயை அதிகப்படுத்த வட்டாட்சியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 456 நபர்களிடமிருந்து திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் 432.82 ஏக்கரும், 485.1698 கிரவுண்ட் மனைகளும், 20.69 கிரவுண்ட் கட்டடமும், 15.597 கிரவுண்ட் திருக்குளமும் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு தொகை ரூ. 1628.61 கோடி ஆகும். திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் தனியார் நபர்கள் மனைகளை கட்டியிருந்தால் அதை திருக்கோயிலுக்கு வாடகைதாரர்களாக மாற்றவும், காலி மனைகளை உடனடியாக திருக்கோயில் வசம் கொண்டு வரவும் பணிபுரிய வேண்டும்.
திருக்கோயில் நிலங்களில் நிலப்பட்டா, பெயர் மாற்றம் செய்ய வேண்டிய இடங்களை கண்டறிந்து திருக்கோயிலுக்கு பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோயிலின் எல்லைக்குட்பட்ட நிலங்கள், மனைகள், கடைகள், வீடுகள் தொடர்பான விவரங்களை புத்தக வடிவிலும், மென்பொருள் வடிவிலும் தயார் செய்து வைக்க வேண்டும். தற்போது திருக்கோயில் நிலங்கள் நவீன உயர் தொழில்நுட்பத்தில் அளவீடு செய்யப்பட்டு COLLABLAND மென்பொருள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








