தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தியுள்ள மத்திய பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பணவீக்கத்தை அதிகரித்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே, மத்திய அரசு சமையல் எரிவாயு, 5 கிலோ எரிவாயு ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்தி, சாமான்ய மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கியது.
போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதன் மூலம் காய்கறி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் மக்கள் நலன் குறித்து பேசும் ஒன்றிய அரசு, தேர்தல் முடிந்தவுடன் பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, அதன் பலன்களை நாட்டு மக்களுக்கு அளிக்காமல் ஒன்றிய அரசு அந்த வருவாயை தன்னகத்தே வைத்துக் கொண்டது. தற்போது உள்ள சூழ்நிலைகளை காரணம் காட்டி, தொடர்ந்து மக்களிடமிருந்து வரி வசூலித்து வருவது மக்களை ஏமாற்றும் செயல். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெற்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







