கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மிக முக்கியமான தேசிய மாநாட்டை நடத்தி வருகிறது. இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட தலத்தில் மாநிலங்களின் உரிமைகள் குறித்து இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகள் உரையாற்றினர். நாளையும் உரையாற்ற உள்ளனர். முதல் நாள் நடைபெற்ற கருத்தரங்களில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜீ.எம். அக்பர் அலி, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
குடந்தை திராவிட மாடல்:
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ஆற்றிய உரையில், மிக முக்கியமான பல வரலாற்று தரவுகளையும் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள மாநில சுயாட்சிக்கான நெருக்கடிகளையும் விரிவாக பேசினார். 50 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வை அவர் சுட்டிக்காட்டி திராவிடர் கழகம் 50 ஆண்டுகளுக்கு முன்பே குடந்தை திராவிட மாடல் என்ற ஒன்றின் மூலம் கல்வி துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததாக பேசினார். அதாவது, 50 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம், மாநகரத்தில் திராவிட மாணவர் கழகப் போராட்டம் நடைபெற்றது. குடந்தை அரசினர் கல்லூரியில் இரண்டு பானைகள் வைக்கப்பட்டன. ஒரு பானையில் உள்ள தண்ணீரை பார்ப்பனர் மட்டும் குடிக்கலாம் ; இன்னொரு பானையில் உள்ள தண்ணீரை பார்ப்பனரல்லாதார், மற்றவர்கள், சூத்திரர்கள், பஞ்சமர்கள் எல்லாம் குடிக்கவேண்டும் . இதை வெளிப்படையாகச் சொல்லாமல் , தனியாகப் பிரித்து வைத்தார்கள்.
அந்தப் பானையை உடைத்து போராட்டம் நடத்தி, திராவிட மாணவர் கழகம் பிறந்தது. அதன் மூலமாக சமூகநீதி, ஜாதி ஒழிப்பு என்பதிலிருந்துதான் இந்தக் குடந்தை வரலாறு படைத்தது. திராவிட மாடலுக்கு முன்பாக, குடந்தை மாடலை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, சமூகநீதிக்கு திராவிடர் கழகம் வித்திட்டதாக கூறினார்.
அண்ணா தான் இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு கடைசி கடித்ததில் மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுப்பது பற்றி தான் விரிவாக பேசியதாகவும், இன்றும் மாநிலங்களின் உரிமையை மீட்க போராட வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இந்திய திணிக்க முயன்ற ராஜாஜியையே பிற்காலத்தில், இங்கிலீஸ் எவர் – இந்தி நெவர் (English ever hindi never) என்று பேசவைத்தது திராவிடர் கொள்கைகள் தான். எனவே, மத்திய அரசால், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முடியாது எனவும் கூறினார்.
நீட், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழ்நாட்டின் அனுமதியை மத்திய அரசு பெறவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணை ஒரு மறுபார்வை :
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணை ஒரு மறுபார்வை : கல்வி கல்வி கொள்கைகளில் மாநில சுயாட்சியும் என்ற தலைப்பில், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜீ.எம். அக்பர் அலி பேசிய உரை மிக முக்கியமானதாக இருந்தது. 1976 ஆம் ஆண்டில் அவசர நிலை பிரகடனத்தின் போது மாநில பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டதால் தான் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறினார். இதனால் தான், நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகள் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புகுத்தப்பட்டுள்ளதாக விமர்சித்தார். கல்வித்துறையில் மாநிலத்தின் உரிமையை மீட்க வேண்டும் என்றால் கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
திராவிட மாடல் ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் :
தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் திராவிட மாடல் ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவில் தான் அத்தியாவசிய தேவையான உணவு உள்ளிட்டவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கூறினார். அண்ணாவின் தேர்தல் வாக்குறுதியான மூன்று படி லட்சயம் ஒரு படி நிச்சயம் என்ற முழக்கம் உணவை பொதுமக்களுக்கு கொடுத்து உணவு பஞ்சத்திலிருந்து மக்களைக் காத்ததாக கூறினார். இலவசங்கள் கொடுத்து தமிழ்நாட்டை கெடுத்துவிட்டார்கள் என்று திராவிட மாடலை கொச்சையாக பேசுபவர்கள் அதன் உண்மையை மறைப்பதாக கூறிய அவர், திராவிட மாடல் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தியதாக பெருமிதம் தெரிவித்தார்.
திராவிட ஆட்சிகளால் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு ஆதாரங்களுடன் திமுக விடை அளிக்கும் வகையில் தனது மாணவ அணியின் தேசிய மாநாடு நடைபெறுவது போல் உள்ளது.







