பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் ஆகியோர் இடையே கடந்த இரண்டு வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக மோதல் போக்கு இருந்து வந்தது. கட்சிக்கு தலைமை யார்?, கட்சி நிர்வாகிகள் நியமித்தல் உள்ளிட்ட பிரச்னைகளில் இருவரிடையே கடுமையான மோதல் நேர்ந்தது. மேலும் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொள்வதும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருவரும் தனித்தனி அணியாக போட்டியிட்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் தரப்பு மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டு 4 பேர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளில் அன்புமணி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராமதாஸ் தீவிர அரசியலில் இருந்து விலக உள்ளதாகவும், இனி அன்புமணி ராமதாஸ் கட்சியை வழிநடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகல் பலர் கலந்து கொண்டனர். இதில் பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வடிவேல் ராவணன் பொதுச் செயலராகவும், திலகபாமா பொருளாளராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.




