சிவசேனா சொத்துக்களை ஏக்நாத் ஷிண்டே குழுவிற்கு மாற்ற முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உத்தவ் தாக்கரே தரப்பினர் வசம் உள்ள சிவசேனா கட்சியின் சொத்துக்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு மாற்ற மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மகாராஷ்டிராவில் நிலவிய…

உத்தவ் தாக்கரே தரப்பினர் வசம் உள்ள சிவசேனா கட்சியின் சொத்துக்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு மாற்ற மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக, உத்தவ் தாக்கரே மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தங்களது உரிமையை நிலைநாட்ட  நீதிமன்றங்களை நாடி தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதில் ஒன்றாக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஷிஷ் கிரி என்பவர் சிவசேனா கட்சியின் கீழ் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை உத்தவ் தாக்கரே தரப்பினர் ஆளுமை செய்யக் கூடாது என்ற வகையில், கட்சியின் அனைத்து சொத்துகளையும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி, எந்த ஒரு கட்சியின் சொத்துக்களும் அப்போதைய கட்சி தலைவராக இருப்பவரின் தலைமையில்தான் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சிவசேனாவின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்த்தரப்பு வாதமாக, இந்த கட்சியின் நிதி மற்றும் சொத்துக்கள் அனைத்தும் அப்போதைய தலைவராக இருபவரால் மட்டும் அல்ல, கட்சியை சேர்ந்த அனைத்துத் தலைவர்களாலும், தொண்டர்களாலும் பல ஆண்டுகளாக ஒன்றிணைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டதாகவும். அப்படி இருக்கும்போது கட்சி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் இதில் எந்த ஒரு குழுவிற்கும் தனிப்பட்ட
ஆதாயமோ உரிமையோ இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று விசாரணையின் முடிவில் ஆஷிஷ் கிரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.