மொழி சிறுபான்மையினருக்கு கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை பிப் 6ம் தேதி விரிவாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி மொழி
சிறுபான்மையினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டிருந்த கட்டாய தமிழ் மொழி தேர்வு குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக தமிழக மொழியியல் சிறுபான்மையினர் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு
முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மொழியியல் சிறுபான்மையினராக பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருக்கும் சூழலில் அரசின் இந்த முடிவினால் அவர்களது கல்வி பாதிக்கப்படும் என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், வேறு மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு விலக்கி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் நீங்கள் ஏன் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழி சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்களுக்கும் கட்டாய தமிழ் மொழி தேர்விலிருந்து விலக்களிக்கக் கூடாது ? என கேள்வி எழுப்பினர்
மேலும் இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்கவுள்ளதாகவும், அதற்காக வழக்கை வரும்
பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தனர்.
– யாழன்







