விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பழனியப்பன் போட்டியிட்டார். தேர்தல் களத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. போட்டிப்போட்டுக்கொண்டு இரண்டு பேரும் பரப்புரையில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கையன்று விராலிமலை தொகுதியில் மட்டும் பலமுறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. சுமார் 26 மணி நேரம் நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜயபாஸ்கர் 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.







